Saturday, 9 August 2014


“லாரி ஓட்டிய சுந்தரம் மாமா
புதுவயல் போனதேயில்லை.
புதுவயல் சரக்கும் எடுப்பதில்லை.
போக நினைப்பது மாதிரி தான் போல
போக நினைக்காததும்.
குறிப்பிட்ட எல்லைக்குள்ளே 
பரவிக்கிடக்குது வாழ்வு.
உடல் கிடத்தப்பட்ட ரெண்டாங்கட்டுச் சுவர்
விரிசல் விட்டிருந்தது.
நீளும் விரிசலின் வழியே எதைத் தேடியோ
பயணிக்கிறது ஊதுபத்திப்புகை.
அழுது வீங்கிய முகத்துடன்
சாவதானமாய் கொண்டை அள்ளிமுடியும்
வள்ளியத்தை முகத்தில் உறைந்த அமைதி.
கிணற்றின் அடியாழ நிசப்தம் போல
அத்தனை அடர்த்தி.
புதைகுழியில் போட அத்தை தந்தாள்
பழைய வேட்டியுடன்
மரப்பிரேம் போட்ட புகைப்படம்.
கருப்பு வெள்ளையில்
பெல்பாட்டம் பேண்டும், பெரிய காலர் வைத்த சட்டையுடன்
மாமா கைவைத்து நின்றார்
தாவணியின் மேலே அன்னப்பட்சி டாலர் போட்டிருந்த
அக்காவின் தோள் மீது.
படத்தின் கீழே இடது மூலையில்,
‘தங்கம் ஸ்டுடியோ
புதுவயல்’.!!”

-அன்றில்

No comments:

Post a Comment