Saturday, 9 August 2014

“டிவி கருப்பு என்கிற புல்லட் கருப்பு

தென்னந்தோப்புக்கு நடுவே குளுகுளுவென
வாழ்ந்து வந்தவன்.
வெக்கைமிகுந்த எங்கள் வீட்டில் 
கொல்லைப்புறக்கேணிக்கருகில் 
ஆத்துமணல் கொட்டி நீர் தெளித்து
அவன் கிடப்பு.
கருப்புநிறத்தில் மயிற்பீலி மினுமினுப்பு.
சாவப்பட்சியில் மயிலுக்கு வரும் நிறம்.
தோட்டா மாதிரி வேகமாம் பிராயத்தில்
அதனால் புல்லட் கருப்பு
தீபாவளிபோரில் டிவி ஜெயித்ததால்
டிவி கருப்பு ஆனான்.
ஊறவைத்த கொண்டைக்கடலைப் பிடிக்குமளவு
சின்ன வெங்காயம் பிடிப்பதில்லை.
பெரிய கம்பு இஷ்டம்.சின்ன கம்பைத்
தொடுவதேயில்லை.
இரவில் எனது தலைமாட்டில் படுக்கை.
எங்களுடன் படுக்கையில் ஒருநாள் கூட
கூவியதேயில்லை.
கொஞ்சம் அழகன் என்பதில் திமிருண்டு
நெஞ்சை நிமிர்த்தியே நடப்பான்.
முதுகைத் தடவிக்கொடுத்தால் கண்கள் கிறங்க
கழுத்தைத் திருப்பிச் சிக்கெடுப்பான்.
பெரிய கோழியைத் தவிர எதையும் திரும்பிப்
பார்க்காத ஏகபத்தினி விரதன்.
பள்ளி முடிந்து வந்து சாப்பிடுகையில்
சாப்பிட்டு முடிக்கும்வரை பக்கத்தில்
அமைதியாக நிற்பான்.
இரவில் தோசைமாவெடுத்து காதிற்கு கீழுள்ள
சிவப்பு மடல் போன்ற தொங்கலில்
தோடு போடுவேன்.
கையில் செல்லக்கொத்து கொத்துவான்.
அவன் முன்னால் எந்த சாவலைத் தூக்கினாலும்
வீம்பாக நம்மைத் திரும்பிக் கூட
பார்க்க மாட்டான்.
பேரன்புக்காரன்.
சுவர் தாண்டிப் பக்கத்து வீட்டுச் சாவல்
வந்தால் சண்டைக்கு மல்லுகட்டுவான்.
சண்டை போட விடாமல் தூக்கினால்
அந்த கோபம் தீரும் வரை நம்மைக் கொத்துவான்.
எவன் சொன்னது ஐந்தறிவென்று?
சண்டையில் சூரன்.
போரில் குத்து வாங்கியதேயில்லை.
அவனுக்கென்று தனிக்கத்தியுண்டு.
ஊர் புகழ்ந்த அர்ச்சுனன் வாத்தி சாவலை
ஒரே மூட்டில் சோலியை முடித்தவன்.
ரெண்டு தடவை ஈராசி உள்பட
பதினெட்டு முறை ஜெயித்தவன்.
மாசிமகப் போர்.
நான் பள்ளிக்கு
அவன் சாவப்போருக்கு.
பட்சியில் அன்று ஐந்தாம் ஜாமத்தில்
மயில் ஊன்.
ஊனென்றால் காயத்துடன் வெற்றி.
மாலை திரும்புகையில் தோத்த சாவல் அடுப்பில் கொதிக்க
செப்பட்டையில் ரெண்டு,தொடையில் ஒன்றாக குத்து
வாங்கிப் படுத்திருந்தான்.
கருத்து உறைந்த இரத்தம் பிதுக்கி
மஞ்சள் தடவி ஊசி நூலால்
தையல் போட்டேன்.
நாளாக நாளாக நீலம் பாரித்துக்
குன்னிக்கொண்டே போனான் கருப்பு.
பள்ளி முடிந்து வந்த மாலை அவன் எங்குமில்லை.
வெக்கை தாளாமல் ஆத்துமணலுக்கடியில்
படுத்துவிட்டான் போல.
அய்யா சொன்னார் வலது செப்பட்டையில்
ஒரு ஆழமான சொருகுடா
நாம பார்க்கலை அதான்....
வானமெங்கும் மினுமினுக்கும் அந்த கருப்புநிறமாக
காதெல்லாம் அவன் கூவும் பேரிரைச்சல்.
செவலையும் வெள்ளைப்பொரிவெள்ளையுமாக
ஆயிரம் பேர் வந்தாயிற்று.
யாருக்கும் நான் தோசைமாவு
தோடு போட்டதில்லை.
யாரும் என்னருகே அமர்ந்து
செல்லமாய் கொத்தவில்லை.!!”

-அன்றில்

No comments:

Post a Comment