Tuesday, 23 September 2014

“இருபுறமும் பூச்சாடியிருக்க
நடுச்சேரில் பூப்போட்ட
பாவாடை தாவணியில்
சடை முன்பின் இட்டு
நெஞ்சில் தாமரை டாலருடன்
கருப்பு வெள்ளையாய் 
சிரிக்கும் தனமக்கா தான்
சாம்பல் படிந்த தலையுடன்
பழுப்பேறிப்போன தாலிக்கயிறுடன்
குத்துக்காலிட்டு 
ஊதாங்குழல் ஊதுகிறாள்.!!
“பனம்பழம் பொறுக்க எழுப்பினாள்
கலாக்கா.
வழமைபோல் ஒத்தக்காச்சி 
எனக்கென முனங்கிவிட்டு
தூங்கிய என்னைத் தூக்கி 
இடுப்பில் வைத்துக்கொண்டு
நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டின் வெளிவிளக்கு
நட்சத்திரம் போல் மின்னும்
தொலைவு பனங்காடு.
வேர்வையுடன் குட்டிகுரா வாசமும்,
பனியின் குளிரும்,
அவள் மார்பின் வெதுவெதுப்பும்
இறுக அணைத்துக்கொள்ள,
பனம்பழம் விழுந்த சத்தம் கேட்டுத்
தூக்க முடியாமல் தூக்கி
அவள் ஓடியபோது
விழித்துக்கொண்டேன்.
அவள் புகைப்படத்தின் முன்
ஒத்தக்காச்சி வைத்திருந்தாள் அம்மா.
அக்கா குட்டிகுரா வாசத்துடன்
சிரித்தது போலிருந்தது.!!”
“பரபரப்பற்ற ரயில் நிலையத்தின் நடைமேடை முடிவில் அப்படியேதானிருக்கிறது அந்த அமர்விடம். தூசியும் காய்ந்த புங்கைப்பூவுமாய்.இங்கு தான் அவள் வந்து நின்றாள் நனைந்த ஒரு மழைப்பறவை போல. இரத்தசோகை தேகத்தில், ஜ்வாலை பொழிந்த கண்கள். கற்பலகை மீது கூந்தல் சொட்டிய குளத்தில் விழுந்த நான், அவள் கண்களின் மின்னல் பிடித்து மேலேறினேன். நெடுநாள் கூடிப்பறந்த பறவையைப் போல்பார்த்தாள். சிலரால் சிலரை நெடுநாள் பழகியது போல் அணுக முடிகிறது. கண்களால் ஏதேதோ பேசினாள். அது பேரன்பின் மொழி.கனிந்து கண்ணாடியாய்ப் பிரதிபலித்தேன் அன்பின் சூட்டை. அவளுக்கான வாழ்வின் ஜன்னலில் கம்பிகள் இல்லாதது குறித்தும், நினைத்த நேரம் விர்ரென வானம் ஏகுவதையும், வானிலிருந்து பார்த்தால் எல்லாமே அழகென்றும் சொன்னாள். கம்பிகள் இல்லாத ஜன்னல் பாதுகாப்பற்றதில்லையாவென எனக்கேட்டேன் . நான் அனுபவிக்காத சுதந்திரமல்லவா அது? பொறாமையின் நிழல் என் கண்களில்.ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி தலையின் விழுந்த புங்கைப்பூக்களைத் தட்டி விட்டாள். பின் விழும் மழையை ஏந்திக்கொள்வது போல் பார்த்தாள்.அவளே ஒரு நிரம்பித் தளும்பும் கோப்பை போலிருந்தாள்..ஒவ்வொரு மழை நாளிலும் இங்கு வருவதாகவும், அவள் வர நினைக்கும் போதெல்லாம் மழை பொழிவதாகவும் சொன்னாள்.கடந்து சென்ற ரயிலின் பேரிரைச்சலுக்குக் காது பொத்திய என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் நீ பயப்பட வேண்டியது இடிக்கல்ல, மின்னலுக்கு.தூறல் முடிந்த பொழுதில் அவளின் சிறகுகள் காய்ந்து விட்டிருந்தன. பறக்கத் தயாரானவள் அருகில் வந்து கையைப் பிடித்துக் கல்லில் வைத்தாள். முதன்முதலாய் ஒர் ஆணின் கையைப்பற்றுவதாகவும்,உன் ஜன்னல் கம்பிகள் இற்று உதிரும் வரை, இனி வரும் மழை நாட்களில் இதில் படிந்த உன் ரேகைகளை என் இறகுகளால் தடவிப்பார்த்துக்கொள்வேனெனச் சொல்லிப் பறந்தாள். என் கைளில் ஒரு வெம்மையான இறகு.மனதில் மெல்லிய வெயிலடித்தது.கம்பிகள் எளிதாய் உதிர்வதில்லை.இதோ இன்று ரேகை படிந்த இடத்தில் அந்த இறகை வைத்தேன். நினைவுகளில் அவளின் சிறகசைவு.பின்னாள் இரைச்சலுடன் ரயில் கடந்துக்கொண்டிருந்தது.சலனமற்று வானைப் பார்த்தேன். கருத்து நகர்ந்த மேகத்தின் முதல் துளி இறகின் மேல் விழுந்தது. அவள் ஜன்னலுக்குக் கம்பிகள் முளைத்திருக்கலாம்.!!"
“அடிமை வானின் நிலவு தகிக்கிறது.
சூரியன் தன் சாட்டைக்கதிர்களை
சொடுக்கிறது.
இக்கடலின் குளிர்ந்த நீர்மையை
நான் உணர்ந்ததேயில்லை.
மண்ணின் வாசம் என்னை
அன்னியனென்கிறது.
காற்று நீயொரு அடிமையென
கூவுகிறது.
என்னும் ஏன் அடிமைவாழ்வு
என்கிறீர்களா?
நிச்சயம் விடைபெறுவேன்
பணியிடத்துப் பூஞ்செடி
நிச்சயம் பிழைத்துக்கொள்ளுமென
நம்பிக்கை வருமோர் நாளில்.!!"
“நான் எரிமலை வாயில் 
கூடுகட்டியவள்.
அந்த நெருப்புக்குளத்தில் 
நீந்திக்குளித்த சிறுபறவை.
புகையும் சாம்பல் மேகம்
கிழித்துப் பறக்கும் சிறகசைவில்
அனல் கக்கும்.
இத்தேகமெங்கோடும் தீக்குழம்பு.
அன்றலர்ந்த உன் நேசத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
குளிர்ந்து கொள்கிறேன்.
உன் தீண்டலில் சாம்பலாய்
உதிர்க்கிறேன் இறகுகளை.
மீறி வெளிப்படும் கனல் கூடலில்
வேர்வை குளிர் போக்க.
துரோக மேகத்தின்
திராவக மழை கொண்டெனை
அணைத்தாய்.
துளிகள் ஒவ்வொன்றும்
வாங்கிப் பற்றுகிறேன்.
உள்ளில் கனரும் கங்கின்
திகுதிகு நடனம்.
மீண்டும் வந்துவிட்டுருந்தன
தீயின் இறகுகள்.
காறி உமிழவும்
உன் சாம்பல் எடுத்தூதவும்
ஒரு நொடி ஒரே நொடி.
நான் நெருப்புக்குளத்தில்
நீந்திக்குளித்த சிறுபறவை.!!”
“பேருந்து ஜன்னல் சதுரத்தின்
வழியே பார்க்கிறேன்.
வாழ்வின் காம்பஸில்
ஒரு வட்டம் போட்டு முடித்த
பென்சில் தேகம்.
வாயருகே கைகள் குவித்து
கண்கள் கிறங்க நிதானித்து
பின் தேள் கொட்டியது போல்
ஒர் உதறல்.
வழமை போல் 
தன் பேச்செல்லாம்
புகையாய் மாற்றியபடி.
பழைய துணியிலான ட்ரைசைக்கிள்
இருக்கையில் இல்லாத தூசியை
ஒரு தட்டுத்தட்டி ஏறி அமர்ந்து
மிதிக்கத் துவங்கினார்
மணியுடன் இணைத்தக் கம்பியை
விட்டுவிட்டு இழுத்தபடி.
காதுகளில் ஊரில் முதன்முதலாய்
அவர் வாங்கிய பிளசர் காரின்
ஹார்ன் சத்தம்.!!"
Lik
“கசந்த மலரின் மகரந்தமாய் 
காத்துக் கிடந்தேன்
நெடுங்காலம்.
ஏதேனுமொரு மஞ்சள் 
பட்டாம்பூச்சியின் காலிலமர்ந்து
வருவாய் இனிய மகரந்தமென.
கடற்கரையில் தனித்துக்கிடக்கும்
சிப்பியை எடுத்துக்கொள்ளும் 
கை போல
உலர்ந்துவிட்ட என் ப்ரியத்தின்
மயிரிழைகளை ஆதூரமாய்
தடவிக்கொடுத்தாய்.
நிறமிழந்து வெளிறிய
கனாக்களுக்குச் சொர்க்கத்து
மலரின் வண்ணமெடுத்து
சாயமேற்றினாய்.
ஏகாந்தவெளியினில் மிதக்கையில்
வந்துவிட்டிருந்தது
நேசக்காய்ச்சல்.
குளிர்ந்த உன்கண்களில்
ஒரு காட்டுத்தீயின் நடனம்
மெல்ல மெல்ல ஜ்வாலை
வாங்கிக் குளிர்காய்கையில்
முணுமுணுக்கிறேன் ஆதிவாசியின்
பாடலை.
சோப்புக்குமிழாய் வெடித்துச்சிதறிய
வாழ்வில் விழுகிறோம்
அடுத்தடுத்த மலர்களில்
நித்திலமாய்.
மழைக்காட்டில் அருகருகே
கனிந்த பழங்களை
உண்ட கிளிகள்
காதல்மொழி பேசி
பிரிந்துவிட்டன.
நாம் ஒரே குழியில் விழும்
நேசத்தின் விதைகள்.!!"
"காதல் என்பது காத்திருத்தல்.
மனங்கனிந்து வீழும் தவம்.
சில கனிகள் கனிய வேண்டும்.
கனிந்து வீழ வேண்டும்.
வீழ அனுமதிக்க வேண்டும்.
கனிபுசித்தல் பெருங்கனவு.
காத்திருத்தல் உன்னதம்.!!"
“கரையான் அரித்த கலப்பையிலிருந்து
கொழுவை தட்டியெடுத்தேன்.
துணைபிரிந்த கண்ணீர் 
பளபளத்த நுனிவரை 
ஓடியிருந்தது.
துக்கம்விசாரிப்பது போல் 
கன்னம் ஒத்திக்கொண்டேன்
இன்னும் உழுதமண்ணின் குளிர்ச்சி.
காதருகே ஈனஸ்வரத்தில்
வயல் எப்படியிருக்கென்றது 
‘மழையில்லை
பாளம் பாளமா தரிசா’
‘நெல் கொத்தும் கொக்கு’
‘கண்மாயில் தண்ணியில்லை’
‘மூலக்கரை வேம்பு’
‘வெட்டுக்கூலியோட 15௦௦௦ ரூபாய்’
‘தாத்தா’
‘ஒருவருடமாயிற்று’ என்றேன்
நசுங்கிய குரலில் கேட்டது
‘என்னையும், வயலில் வேம்பிருந்த
இடத்தில் புதைத்துவிடேன்’
கன்னத்தோடு வைத்து
இன்னும் அழுத்திக்கொண்டேன்.!!”
“தமிழ்க்குட்டி முயல் வரையவேண்டுகிறாள்.
வெண்ணிற கொழுத்த முயல் வரைந்தேன்.
முயல் பறக்குமா என்கிறாள்
ஓடும் பாதை வரைந்தேன்
பாதை எங்கே போகுதென்கிறாள்
பாதை சேரும் மலை வரைந்தேன்
மலை வரைந்த கை தானே 
மறையும் சூரியனையும்
இறகு விரித்த பறவையையும் 
வரைந்து விடுகிறது.
முயல் ஏன் ஓடுகிறதென்றாள்
குறிவைக்கும் துப்பாக்கியும்,
அது மறைந்து கொள்ள
காட்டையும் வரைந்தேன்.
அத்தனை வாஞ்சையுடன்
மடியிலெடுத்து வைத்துக்கொண்டாள்
என்னை நடுங்கிய சிறு முயலாக.!!”
"உன்னுடன்
பகிரப் போவதாய்
நினைத்தழித்த
வாழ்வில்
எனக்கான 
மிச்சங்களை
தேடி
அலைகிறேன்.!!"

Saturday, 6 September 2014

“சித்திரைச் சூரியனின் சாம்பல்
புழுதியாகக் காலில்.
தண்ணீர்ப்பாக்கெட்டின் சிதறிய துளிகள்
புழுதி பொத்த தடங்கள்.
ஒருபோதும் போக நினைக்காத 
பாதையில்,
மனம் நின்றிருக்க
உடல் மட்டும் போகுது.
திராவகக் குளத்தில் நாலு 
முங்கு முங்கினாற்போல்.
எவன் சுழற்றுவது 
விதிச்சோழிகளை?
‘முகத்தில் விழிக்காதே’ என்று
சொல்லிய முகத்தில்
எப்படி விழிப்பது?
அதுவும் நாலுபேர் முன் 
மானம் கெடுத்தவளை.
அன்று மானம் கோமணத்துணி.
‘இப்பத்தான் படிக்கப் போனதுல 
கூட ஒண்ணைக் கூட்டிட்டு
வந்துருதே’.
புடலங்காய் காதல்.
‘நேத்துவரை பார்க்கணும்னு
இழுத்திட்டு கிடந்துச்சே’.
வீராப்பு மீசையை மழித்தேறிய
துப்பில்லை.
‘இன்று என்னன்னு கேட்க 
நாதியில்லை’ எனும்போது
தானே உதிர்கிறது மீசை.
அந்தக் கம்பிக்கேட்டிற்கு
அப்படியொரு சூடு.
விரைத்த அவள் கண்களில் இருந்த
ஏக்கச் சூரியனின் சூடு.
ஓடிவந்து முகம்படித்த கொலுசு
ஓடுகிறது மாட்டிவிட்ட
கைகளைத் தேடி.
இப்போது அது கொலுசுச்சத்தம்
இல்லை.
இருபது வருட அழுகையாய்
காணா ஏக்கமாய்
தகிக்கும் கோபமாய்
பரல்கள் வெடித்துச்சிதறும்
பேரோசை.!!”
"பென்சில் 
கொடுத்துப்
பெற்றுக்கொண்டேன்
சுருள்சுருளாய்
பால்யங்களை.!!"
“கொய்யாப்பூவில் ஊரும் எறும்பு
சோப்புக்குமிழ் உடைத்து 
விளையாடும் சிறுமி
விரலிடையில் பிதுங்கும் களிமண்
உழுதவயலில் ஒரு நடை 
ஆயாவின் பொக்கைவாய்
பனையோலை காற்றாடி
கண்மாயில் பெய்யும் மழை 
பேருந்துபயண ஜன்னல் காற்று
சிங்கம் படம் போட்ட 
சிங்கப்பூர் பனியன்.
சுட்ட சர்க்கரைவள்ளிகிழங்கு வாசம்.!!”
“அன்பில் ஜனித்த சொல்லொன்று
கண்ணாடிப் பார்க்கிறது.
ஆடையை முன்னும் பின்னும்
சரிசெய்கிறது.
ஒப்பனை மிகுதியாய்த் தெரியாமல்
சரிபார்த்துக் கொள்கிறது.
ஒருக்களித்துப் பார்த்து 
தான் அழகெனச் சிரிக்கிறது.
யாரும் பார்க்காதபோது கண்ணாடியை 
முத்திக்கொள்கிறது.
நா முகட்டிலிருந்து எவ்வி
சிறுகுருவியாய் பறப்பதையும்,
பாடும் இனிய பாடலையும்
நினைத்து மகிழ்கிறது.
தன் இனிமையை எண்ணிச்செருக்குடன்
நடக்கிறது முகடு நோக்கி.
உணர்ச்சியின் அவசரத்தில்
பிறந்த வசவொன்று
உமிழ்நீர்க்குளத்தில் தள்ளிவிட்டுப்
பறக்கிறது பருந்தாக.
பல்லிடைவெளியில் பார்த்தப்படி
மூழ்குகிறது
‘மயிராண்டி நாசமாகப் போக’
எனச் சபித்தபடி.!!”
“யாருமற்ற பௌர்ணமி இரவில்
நீராட கடலிறங்கியது
கரையோரத் தென்னை.
நெடுங்காலம் நின்ற
சலிப்பு தீர நீந்தியது.
சிறுமீன் கூட்டத்தைக்
கீற்றுகளால் அளைந்து
விளையாடியது.
நிலவைப்பார்த்து நீர்க்குவித்து
ஊதிச்சிரித்தது.
அலையின் பாடலுக்கேற்ப
கடலைக் கட்டிபிடித்து
ஆடத்துவங்கியது.
நழுவி விழுந்த பானைக்கள்
குடித்துக் கடல் ஆர்ப்பரிக்க,
கீற்றுக்கூந்தல் சுழற்றி சுழற்றி
வேகமெடுத்தாடியது.
ஆடலின் உச்சியில்
போதமற்று கடல் வீழ,
நீர்சொட்ட வெளியேறியது
கூந்தல் கோதி.
காலையில் கரையொதுங்கியிருந்தன
இரண்டு கள்ளுப்பானையும்,
ஒர் இளநீர்க்குலையும்.!!”
“சுதாக்காவுக்கு எல்லாத்துக்கும் 
இனிப்புப்புளியே வேணும்.
சொட்டாங்கல் விளையாட
கொட்டாச்சியில் சமைத்துக் காட்ட
பாவாடை தரை பாவ ஊஞ்சலாட
உப்பு சேர்த்துரசி புளியங்காய் தின்ன
புளியம்பூவை சீவலென ஏமாற்ற
குளிக்கும்போது என் டவுசரெடுத்து
உச்சிக்கிளையில் மாட்ட,
சமைந்ததை முதலில் சொல்ல
சேது கொடுத்தனுப்பும் முத்தங்களை
பெற்றுக்கொள்ள,
நிச்சயதன்னைக்குக் கட்டிபிடித்தழ
இப்படிக் குளத்து நீரில் கால் நனைய
தாவணியிட்டு தொங்க.!!”
“எங்கே, எப்படி சாகவேண்டும்
எனக் கேட்கிறாய்?.
வான் பார்த்து, கடலில்
மூழ்கவேண்டுமென்கிறேன்.
நான் அறிவேன் 
தீட்டப்படும் கொலைவாளின்
பளபளத்த சரிவில் வழியும் குருதி
சுவைப்பாயென.
ஆண்டாண்டாய் அடங்கிய குருதி
திராவகமாய் கொதிப்பது
உனக்கு தெரியுமா.?”

“சன்னமான தூறலில்
ஒரு மழைநடை.
நீருறிஞ்சிய மணலில்
வெள்ளைத்தோல் வரை
பாதம் அமிழ
பத்மாக்கா கூட நடந்தது போல.
இந்தத் தூறலுக்கு
அவளின் உள்ளங்கை குளிர்ச்சி.
கைரேகைகள் போல் ஓடின
சிறுமழை ஒடைகள்.
குளுமையின் மின்னல்
வெட்டிய புள்ளியில்
என்னுடல் சிலிர்த்துப்
பொடிந்து விழுவதை
மண்புழுவாகிப் பார்க்கிறேன்.!!”
“பனையேறும் முருகேசன் படத்தின் மேல்
குங்குமப் பொட்டு.
சலசலக்கும் பனங்காட்டில்
மொட்டைமுனி தனியே.
கோந்தைவண்டி ஒட்டிய
வரப்புகளில் கருவைச்செடிகள்.
கள் நுரைத்த இடங்களில்
காலி மதுப்புட்டிகள்.
காற்றில் அழுகிய
பனம்பழ வாசம்.
ஓலைக்காத்தாடி சுற்றியக்
கைகளைக் காணோம்.
பனையோலை வேய்ந்த
மாட்டுக்கொட்டகை மட்கியிருந்தது.
என்றோ வெட்டிய நுங்குநீர் ஈரத்தில்
துருப்பிடித்துக் கிடந்தது
அரிவாள்.!!”
“சிவப்பு பலூன் கொத்தை
வெறித்தவாறு கடக்கிறாள்
சிறுமி.
பற்றியிருந்த தந்தை கரங்களில்
அத்தனை கடுமை.
அவள் கண்களில் அசைகிறது
பலூன் ஏக்க நிழலாய்.
கைகளில் சாம்பல் பூத்திருந்த
தாயின் மிருதுமார்புகள்.
‘பலூன் வேண்டுமா?’ என சைகையால்
கேட்க நினைத்த கணம்
அவள் உடலிலிருந்து எழும்பி
பறக்கத் தொடங்கியிருந்தாள்
பலூன்கொத்தைப் பிடித்தபடி.!!”
“கண்மாய் வரை உப்புமூட்டைத் தூக்கி
சோப் போட்டு குளிப்பாட்டி,
டவுசர் மாட்டிவிட்ட
மலரக்கா தான்
செருப்பைக் கழற்றி
வீட்டினுள் நுழையும் போது
‘வாங்கன்னு’ சொல்லி 
சீலைத்தலைப்பை இழுத்துப்
போர்த்தியபடி
அடுப்படிக்குப் போகிறாள்.!!”
“எப்போதோ வெட்டப்பட்ட சிறகுகள்
எப்போதோ சிந்திய கண்ணீரில்
திரண்ட உப்பு.
எப்போதோ நோட்டமிட்ட விழிகள்.
எப்போதோ வந்துவிட்டிருந்தது கண்களில்
நடுக்கம்.
எப்போதோ திருகப்பட்ட மார்புகள்
எப்போதோ கசங்கிய அடிவானம்
எப்போதோ அறுத்திருக்க வேண்டிய
குறிகள்.
எப்போதோ நல்ல மனநிலையிலிருந்த
அவள்.
எப்போதோ தூக்கில் தொங்கியிருக்க வேண்டிய
கடவுள்.
எப்போதும் தீராத வக்கிர மழை.!!”