Friday, 1 August 2014




“இருண்மை தோய்ந்த இரவில்
நிறமிழந்த சொப்பனங்களினூடே
கழிகிறது இப்பெருவாழ்வு.
காட்சிகள் மாறி மாறி வரும் 
சொப்பனத்தில்
யாசனைகளே அதன் பிரதானம்.
சிற்றோடையோரம் அமர்ந்து கூந்தல் கோதும்
அப்பெண்ணிடம்
கூழாங்கல் பொறுக்கித்திரியும் இச்சிறுவன்
யாசிக்க என்ன இருக்கிறது?
புல்வெளியில் படுத்து வானம் பார்க்கும்
அப்பெண்ணிடம்
ஆகாசமாய் அமர்ந்து, ஏகாந்த உச்சியில்
குழல் வாசிக்கும் இச்சிறுவன்
யாசிக்க என்ன இருக்கிறது?
அலை நுரைக்கும் கடலில் கால் நனைக்கும்
அப்பெண்ணிடம்
ஆழி சூழ அமர்ந்து
நிசப்தம் எய்தும் இச்சிறுவன்
யாசிக்க என்ன இருக்கிறது?
அடிமுடியிட்ட கூந்தலுடன்
ஆனந்தம் பாடிச்செல்லும்
அப்பெண்ணிடம்
கூந்தல் சொட்டும் சிகைக்காய் வாசம் ஒதுக்கி
பட்டாம்பூச்சி பிடித்துத்திரியும் இச்சிறுவன்
யாசிக்க என்ன இருக்கிறது?
மழையின் இளஞ்சாரல் வாங்கி
மேனியெங்கும் சிறுஓடையாய் வழியவிடும்
அப்பெண்ணிடம்
மண்வாசனை நுகர்ந்து
முட்டைக்காளான் தேடிச்செல்லும் இச்சிறுவன்
யாசிக்க என்ன இருக்கிறது?
கருப்புவெள்ளை கனாக்கள் ஒருபோதும்
நிறமேறப் போவதில்லை.
சிறுமீன் வேண்டி
தக்கையின் ஒரு அசைவிற்கு தவமிருக்கும்
அச்சிறுவனிடம்
சுனையில் முங்கியெழும் இத்தேவதை
யாசிக்க என்ன இருக்கிறது?
தன்மீதான சிறு அவதானிப்பைத் தவிர.!!”

-அன்றில்

No comments:

Post a Comment