Wednesday, 24 December 2014

“என்ன எழுதி என்ன பிரயோஜனம்?
ஒருநாள் கூட அம்மாவின் 
கை பிடித்து உள்ளங்கை 
பார்த்ததில்லையே.!!”
“இந்தக்கட்டைவிரல் காயமான போது
அக்கா தான் காப்பிபொடி வைத்துக்கட்டினாள்.
அப்போது நிரந்தரமாக வராமல் 
விருந்துக்கு வந்திருந்தாள்.
அப்போது பால் காப்பி தான்
லட்சுமி இருந்தது.
அப்போது பெரிய வீட்டில் இருந்தோம்.
அப்போது அம்மா கழுத்தில்
ரெட்டைவடச் சங்கிலி போட்டிருந்தாள்.
அப்போது அப்பா இருந்தார்.
இப்போது இந்தத் தழும்பு மட்டும்தான்.!!”
“இந்த மணலுக்குள்ளே தான்
மீன்கள் எதிர்ப்பக்கம் ஏறுகின்றன
தாத்தாவின் தோளமர்ந்து நான்
கடந்துகொண்டிருக்கிறேன்.
யாரோ உரசிய மஞ்சள் வாசம் 
வீசிக்கொண்டிருக்கிறது.
இந்தப் பூவரசம் தன் முகத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தது.
வயிறு நிறைய மேய்ந்த லட்சுமி
தண்ணீர் குடிக்கிறது.
எங்கெங்கோ உண்டான குமிழ்கள்
உடைகின்றன.
கண்முன்னே தனமக்கா மூழ்கிக்கொண்டிருக்கிறாள்.
இந்த மணலுக்குள்ளே தான்
இன்னும் எங்களூர் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.!!"
"காய்ச்சலாவென என் கழுத்தில்
நான் கைவைத்துப் பார்க்கும்போது
அவை அம்மாவின்
கைகளாயிருந்தது.!!"
“ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்திருக்கிறீர்களா?
விரல்களில் வண்ணம் பதிய
பிடித்துக் கொல்வதல்ல.
புல்லின் நடக்கும் குழந்தையின்
கால்களுடன் அதைப் பின்தொடர்தல்.
தேனுண்டு மயங்குமதைக் கண்டு
கன்றை நோக்கும் பசுவாதல்.
மயங்குதலின் உச்சியில்
சின்னக்கண்களின் சூரியனை
குளிர்ந்த உங்கள் கண்களுக்கு
இடம்மாற்றிக்கொள்ளுதல்.
மலரை முத்தமிடுவது போன்ற
ஸ்பரிசத்துடன் அதன் இறக்கைகளைப் பிடித்தல்.
அந்தக்கால்களுக்கு ஓய்வு தர
முல்லைப்பூவின் மென்மைக்கு உங்கள் கைகளை
மாற்றிக்கொள்ளுதல்.
இருத்தலையும் பறத்தலையும்
அதனைத் தேர்வு செய்ய விடுதல்.
கனன்ற சூரியனைத் திருப்பித்தந்து
குளிர்வுடன் நோக்குதல்.
தான் ஒரு பட்டாம்பூச்சி என்ற உணர்வுடன்
அதனை இருக்கவிடுதல்.
பட்டாம்பூச்சியை ஒரு பட்டாம்பூச்சியாய்
பார்த்தல்.
இப்போது பிடியுங்கள் ஒரு பட்டாம்பூச்சியை
அல்லது
நீங்களே ஒரு பட்டாம்பூச்சி.!!”



"எனது இந்தக்கைகள் தனித்ததில்லை.
கைகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்
உன் பிஞ்சுவிரல் ரேகைகளை.!!"
"வெற்றுப் பெருவெளியில் தனியே
மிதக்கின்றேன் ஒரு சிறகென.
தனிமையின் உருட்டலில் கீழே விழவிடாமல்
ஊதிக்கொண்டே செல்கிறது
உனது நினைவலைகள்.
கையில் பிடித்துப் பத்திரப்படுத்தாமல்
வேடிக்கைப் பார்க்கிறாள் அச்சிறுமி.!!"
"கையிலிருந்து ஊரிய
எறும்பொன்று பீர்க்கங்கொடியின்
மஞ்சள் பூ நோக்கி நகர்கிறது.
நான் கையிலிருந்து
எறும்பு நகர்ந்த தடத்தில்
விரல்களால் நடக்கிறேன்.!!"
"நேற்றிலிருந்து ஒரு பொட்டுக்கூட அழவில்லை.
இறப்பின் கசடுகள் அழுத்த
அவள் சோர்வாயிருந்தாள்.
அவள் முகம் பார்த்து சிரிக்க முயன்று தோற்கிறேன்.
நட்சத்திரங்கள் வீசியெறியும் சிரிப்பு இனி
அவளிடம் வரப்போவதில்லை.
துக்கம் மீறிப் பேசுகையில் அவள் உதடுகள்
உலர்ந்து,ஒலியற்று பிரிய மறுக்கிறது.
எங்கோ வெறித்துப்பார்த்தப்படி விரல்கள்
சுவற்றில் ஏதோ கிறுக்குகின்றன.
மெல்ல நெருங்கி 'சாப்பிடுறியாம்மா' என்கிறேன்.
திடுக்கிட்டுத்திரும்பி 'அம்மாவென'
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.!!"
"இலையுதிர்க்காலம்
காற்றின் மெல்லிய பேச்சுக்குக் கூட
இலைகள் தலையாட்டிச் சாகின்றன.
உனது நினைவாக சேர்த்து வைக்கப்பட்ட
குறுந்தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
அழிக்கப்படுகிறது என்னால்
கடந்துபோன வசந்தகாலத்தை நினைத்தபடி.
நினைவுகளின் பதிவிலிருந்து மறைய
மறுக்கிறது உன்முகம்.
ஏனோ தளிர்களுடன் நின்ற மரத்தை
பார்க்கத் தோன்றுவதில்லை.
எனது பிரதிபலிப்பாய் இருந்த மரம்
மறைய மறுக்கிறது நினைவுகளிலிருந்து.!!"


"தாயறியா
பிஞ்சுக்கைகளுக்குள்
மார்பு போல
பிதுங்குகிறது
ரோஸ்நிற பலூன்.!!"
"எந்த நேரம் வந்தாலும்
எப்ப வருவோம்னு 
ஐயா வாசலில் உட்கார்ந்திருப்பது போல
இப்பவும் தெரிகிறது.
'வாப்போவ், என்ன இவ்வளவு நேரம்'
கூட தெளிவாய் கேட்கிறது.
ஜீரணிக்க முடியா விசயங்களை
மனம் ஏற்றுக்கொள்வதேயில்லை.
ஏற்றுக்கொண்டே ஆகணுமா என்ன?
சில பிம்பங்கள் அப்படியே
இருந்துவிட்டுப் போகட்டுமே.!!"
"நீச்சத்தண்ணியில குனிந்து
முகம் பார்க்கிறாள்.
பொட்டில்லா நெற்றி நோக்கி
நகருகிறது
மிதக்கும் புளியம்இலை.!!"
“ஒரு வெட்டு வெட்டினால்
ஊரும் மண்புழு.
ஒரு அடி தோண்டினாலே 
ஊறும் ஊற்று.
நாலு படி இறங்கினால் 
இடுப்பு நிறையும் தண்ணீர்.
ஒரு காத்துக்கே விழும்
பட்ட ஓலையும்,
ரெண்டு பனம்பழமும்.
என்ன செய்தால் கிடைக்கும்
அவ்வாழ்வு ? "
"முகம் பாராமல்
நீங்கள் வீசிச்சென்ற
பிச்சைக்காசில்
வாங்கிய இட்லியில்
பாதியைத் தான்
காக்கையாய் அலையும்
உன் பாட்டனுக்குப் போடுகிறாள்
அந்தக் கிழவி.!!"


"தனமக்கா அப்படித்தான்
நிற்பாள்
ஏதோ பெயர் கிறுக்கியழித்த
தென்னை வளையத்தை
தடவியபடி அண்ணாந்து
மரம் பார்த்து.
கொஞ்ச நாளாய்
அணில்குஞ்சொன்று அதுவரை
ஏறிப்பார்த்துவிட்டு இறங்குகிறது.
அக்கா இருந்திருந்தால்
தோடு குலுங்க சிரிப்பாள்.!!"
“ஏதேச்சையா தலையில் இடித்தது சுவற்றில் மாட்டியிருந்த வாய்க்கூடு.அதனுள்ளே பச்சை படிந்த கழுத்துமணி.இப்போது தான் எங்கும் இல்லை. அப்போது எல்லா வீட்டிலும் வண்டிமாடு இருக்கும்.எங்க வீட்டில் பெரிய மாடும்,சின்ன மாடும்.
பேருதான் பெரிய மாடு. அம்புட்டு சாது.அப்புராணி. தண்ணிக்காட்ட போன அதுவே எழுந்திருச்சி நிக்கும்.அவுத்து விட்ட நேரா ஜல்ஜல்னு அமைதியா அது பாட்டுக்கு போகும்.
சின்னவுகளுக்குப் பயங்கரக் குசும்பு. தண்ணிக்காட்ட அவுக்கப் போகும் போது தான் துரைக்கு மூத்திரம் வரும். ‘சார் வெய்ட் பண்ணமாட்டிங்களோ கொஞ்சம்’கிற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு ஆற அமர மூத்திரம் போகும்.
ஒரு தவிட்டுப்பானை, அப்புறம் ரெண்டுபேருக்கும் தனித்தனியா தண்ணிக்கு ரெண்டு தொட்டிக்கல்லு.அவுத்து விட்ட உடனே நேராப்போய்க் குடிச்சிட்டு இருக்கிற பெரிய மாட்ட ஒரு முட்டு முட்டுவாக. அது பயந்திட்டு ஒதுங்கி நிக்கும். இருக்கிற தவிட்டைலா காலி பண்ணிட்டு பெரிய மாட்டை வாலால ஒரு அடி அடிச்சிட்டு தண்ணித்தொட்டிக்கு போவாகச் சின்னவுக. பெருசு மிச்சத்தை நக்கிப்புட்டு தண்ணிக்குடிக்க வரும். சின்னது தண்ணிய போட்டுட்டு ரெடியா இருப்பாக.
பெருசு வாய வைக்கிறப்ப போய் இவுகளும் வாய விடுவாக.பெருச முட்டி தள்ளுவாக.தனியா புடிச்சுக் கட்டினா கத்திகிட்டே இருக்கும்.பெருசை நிம்மதியா தண்ணிகூடக் குடிக்க விடாது. சரி கழுதை தொலையுதுன்னு பெருசு அமைதியா இருக்கும்.வண்டில கூடச் சின்னதைப் பூட்டிட்டு தான் பெருச பூட்டுறது. ஆனா வண்டியிலும் சரி , உழுவறப்பயும் சரி ஒரு சேடு பண்ணாது.
என்னா கதிரடிக்கும் போது தான் கொஞ்சம் வாய நீட்டும் சின்னது. அதுக்குத் தான் வாய்க்கூடு.பெருசு வைக்கோல தொடாது.
ஒருநாள் சூழ்நிலை காரணமா பெருசை வித்துப்புட்டார் ஐயா.அதுல இருந்து சின்னது ஒரு கத்து கூடக் கத்தல. சும்மா பேருக்குத் தவிட்டை நக்கிபுட்டு, ரெண்டு வாய் தண்ணியக்குடிச்சிப்புட்டு வந்து படுத்துரும். பக்கத்துல போனா உப்புத்தாள் நாக்கால ரெண்டு நக்கு நக்கும்.லேசா தலைய நம்மளோட அணைவா சாய்ச்சிக்கும்.காலப்போக்குல சின்னதையும் வித்து, ஊரே ஒரு வண்டிமாடு கூட இல்லமா வழிச்சுப் போட்டமாதிரி ஆகிப்போச்சு.
அந்த வாய்க்கூட்டை எடுத்து கையில வச்சிக்கிறேன்.உள்ள இருந்து ஒரு உப்புத்தாள் நாக்கு எட்டிப்பாக்குது நக்க.கழுத்துமணி சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.!!”
"குப்பைக் கிளரும்
கோழிமூக்கிலிருந்து
உதிரும் சிறுமணலாய்
இருந்தால் போதும்
இவ்வாழ்வு.!!"
“முற்றத்தை திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறு வாசல் வந்தாள்.
வீட்டைத் திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறு தெரு கடந்தாள்.
ஜன்னல் வழியே கையசைத்து
பேருந்து நிறுத்தம் பார்த்தவாறு
போகிறாள்.
காற்றில் கலந்து திரும்பி
வந்ததொரு கண்ணீர்த்துளி.!!