Saturday, 9 August 2014

“சீதா ஆயா வேப்பெண்ணெய் தான் 
தேய்ப்பாள் எப்போதும்.
பேரப்பிள்ளை முகம் சுளிக்கும் அதன் வீச்சத்தை
வேப்பெண்ணெய் வாசமென்பாள்.
கண்கள் மூடி, ஒரு மூச்சு இழுத்து 
நிறுத்திப் பார்த்து சொல்வாள்.
‘இது அவுக மேலு வாசம்ல’.
சிலருக்கு எல்லாவற்றையும் வாசமாகவே
நுகர முடிகிறது.
கண்மாய் கரையின் இடதுமூலை வேம்பின் கீழே
காலை நீட்டி அமர்ந்து,
கைகளால் துழாவித் துழாவி
பழம் பொறுக்கி, உலர்த்தி
முத்தாக்குவாள்.
டவுனுக்கு சைக்கிளெடுக்கும் யாரையும்
பொக்கைவாய்ச் சிரிப்புடன்,
கன்னம் உருவி முத்தம் கொடுத்து
செக்கில் எண்ணெய்யாட்ட
சம்மதிக்க வைக்க முடிகிறது அவளால்.
போன ஆடியில், வேப்பம்பழம் நசுங்க
தலை வைத்து படுத்தவாறே,
மரத்தினடியில் நல்ல சாவு.
மூலைவேம்பின் கீழ் நிற்குமெனக்கு
நாலு வேப்பமுத்தை ஓடுடைத்து,
கசக்கி நுகர வேண்டும்
போலிக்கிறது.!!”

-அன்றில்

No comments:

Post a Comment