Thursday, 9 October 2014

வெறுப்பின் துளி வழிகிறது
முதுகுத்தாரையில்
அமைதியாய்ச் சிரிக்கிறது
தொட்டிப்பூ.
முத்த நட்சத்த்திரங்கள்
இறைந்துக்கிடக்கும் முற்றத்தில்
உலர்ந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி
தேடிக்கொண்டிருந்தாள்.
ஞாபகப்பறவை பறக்கிறது
மனதெங்கும்.
மெல்லத் தலை தடவ
கண்கள் செருகிப் பார்க்கிறது
பூனை.
மெல்லிய சிலந்திநூலென
இழைகிறது நேசம்.!!
பேசும் குரலில் அவர் பாடுவதில்லை.
தடதடக்கும் தண்டவாளத்தை
சாந்தப்படுத்துவது போல்
தொடைகளைத் தட்டி,
பாடுகையில்
தோன்றி மறைகிறது
கலர்கலர் பேனாக்களும்
பனிக்குல்லாயும்.
பனிப்பாறை மீதமர்த்தி
உருகவிடுவதும்,
கங்கு தீயை உள்ளில் வீசுவதும்
எனது நாட்களை
தகவமைத்துக் கொண்டிருந்தார்.
பணி ஒய்வு பெற்ற நாளில்
பரிசளித்த பனிக்குல்லாயை
திருப்பித் தந்தவாறு
‘என் மனைவிக்கு நான்
பாடுவது பிடிக்காது’
எனச்சொல்லிச் சென்றார்.
அந்தக்குரல் குளிரில்
நடுங்கும் ஒருவனுடையது.!!
“நேற்றைய மரம் விட்டு 
பக்கத்து மரம் கொத்துகிறது
மரங்கொத்தி.
குப்பைமேட்டின் புதுக்குப்பையை
கிளறுகிறது கோழி.
தாமரைக்கு இப்பக்கமுள்ள இலைக்கு
மாறியிருந்தது தவளை.
இக்கரையில் வாலடித்துச் சலம்பிய
விரால் மடைக்கரையில்.
அதே வேப்பமரத்துத் தேன்கூட்டில்
தேனீயாய் அலைகிறது மனம்.!!”
ராமசாமிக்கு பேரன் பரிசு வாங்குறத பாக்கப்போறதுல சந்தோசம் தான். ஆனா கடுதாசியோட வந்த பொட்டணம் தான்....
நல்லா இத்துப்போகாத வேட்டியா ஏதாவது கம்பிகிம்பி பட்டுப் பொத்துப்போனதாப் பாத்து டார்டாரா
கிழித்து வைத்துக்கொள்வார். எல்லாமே ஒரே நீள அகலத்தில்.குளிக்கும்போது கூடவே துவைத்துவிடுவார்.கொடியில் அழகாய் ஊமத்தம் பூ போல் அவை ஆடிக்கொண்டிருக்கும்.
அந்த வெள்ளைக்கும், சிவப்பு பட்டுக்கயிறுக்கும் அவ்வளவு அழகாக இருக்கும் அவர் உழும்போது.
‘மறக்காம போட்டுட்டு வந்துடு’
‘யய்யா உங்கப்பன் தைச்சுகொடுத்த பட்டாபட்டியே இன்னும் போட்டதில்லைய்யா. இத ?’
‘கோமணத்தைக் கட்டிட்டு வந்து மானத்தை வாங்கிறாதே’
‘..........ம்ம்ம்.’
ஆண்டாண்டு காலம் இதைக்கட்டித்தானே மானம் காத்தோம். இப்ப என்ன மானம் போகுது? ஒண்ணும் புரியல.
தேதி நெருங்க நெருங்க பயம் வந்துடுச்சு. ஈரக்குலைய யாரோ விட்டு விட்டு உருவுற மாதிரி.அடிக்கடி கொடியில் காயும் கோமணத்தைத் தடவிப்பார்த்தப்படியே நின்றிருந்தார்.
வயலைப் பாத்தா நாத்தெல்லாம் வெள்ளை வெளேர்ன்னு அசையுது. கனவுலயும் ஏதோ ஒரு கை கோமணத்தை உருவுற மாதிரி வந்துச்சு.
தண்ணியக்குடிச்சிட்டு திரும்பிப் படுத்தா கோமணம் புலம்புது காதுக்குள்ள,
‘நேத்து வந்த பய சொல்றான்னு அறுபது எழுபது வருடம் உடம்போட ஒட்டிக்கிடந்த என்னை அத்தெறியப் போறியா ?’
மகன் முன்பக்கம் பின்பக்கம் சொல்லிக் கொடுத்திட்டுப் போனார்.மெல்லக் கோமணத்தை உருவியெடுத்தார்.வாழ்வில் முதன்முதலாய் எல்லார் முன்னும் நிர்வாணமாய் நிற்பதாய்ப் பட்டது. தரையில் கிடந்த கோமணம் காற்றில் அசைந்தது. ஜட்டிக்குள் காலை நுழைத்தவாறே சுவற்றில் சரிந்தார்.அட்டையிலிருந்த மனிதக்கண்களை மூடியப்படிக்கிடந்தது கோமணம். !!
உன் அடையாளங்கள் முற்றிலும் 
அழிக்கப்பட்ட அறை.
ஜன்னலோரம் கிளைதாழ்த்திச் சிரித்த
வேம்பை வெட்டியாயிற்று.
உனக்குப்பிடித்த அரக்குநிற
மெத்தை விரிப்பை
சோப்பு டப்பாவில் மீதமிருந்த
மஞ்சள் துண்டை
நம் துணிகள் பின்னிக்கிடந்த
அழுக்குக்கூடையை
குளியலறை கண்ணாடியில்
ஒட்டிவைத்த ஸ்டிக்கர் பொட்டை
நகப்பூச்சு படிந்த போர்வையை
இடம்மாறி கட்டில்காலில் விழுந்த
முத்தத்தின் கறையை
பின்புறம் உன் பற்தடம்
பதிந்த பேனாவை
அம்புக்குறியிட்டு பெயர்
கிறுக்கிவைத்த மேஜையை
எல்லாம் மாற்றியாயிற்று.
ஞாபக அறைக்கு இடம்பெயர்ந்த
மனதை எங்ஙனம் மீட்பது?!!
"சாயந்திர சண்டைக்குப்
பின்னான
மல்லிப்பூவும்
கருவாட்டுக்குழம்பும்
அத்துணை 
அழகானவை.!!"
கவிதைக்குழம்பு செய்யத் தேவையான பொருட்கள் :-
துடிக்கும் பல்லி வால் – 1
உடல் நசுங்கிய நாகம் (நெடுஞ்சாலையிலெனில் நலம்) – 1
வண்ணத்துப்பூச்சி (இறகு நீக்காதது) – 2
உறைந்த கண்ணீர்த்துண்டுகள் – 3 மேஜைக்கரண்டி
உடைந்த நிலா (பொடித்தது) – 2 மே.க
பழுத்து விழும் இலை – 5
ஆறாத ரணத்திலிருந்து வழியும் குருதி – 200 மி.லி
காதலன் (அ) காதலி (பிரிந்தவர்கள் நலம்) – தேவைக்கேற்ப
குழந்தை (1௦ வயது மிகாத பெண்) – 1
கை உடைந்த பொம்மை – 1
முதிர்கன்னி – 1
ஆணாதிக்கம் – 3 மே.க
பெண் மீதான வன்முறை – 5 மே.க
கனவுகள் (நிறைவேறாதவை) – 2
நதி – 1௦௦ மி.லி
தனிமைத்துயர் – 1
அழிந்த வாழ்க்கைமுறை – தேவைக்கேற்ப
மேகம்,வானம்,காற்று,மழை,இளம்வெயில் – தேவைக்கேற்ப
பூக்கள் – வாசனைக்கு
கடவுள் (அ) புத்தன் – வாசனைக்கு
உலர்ந்த முத்தங்கள் – அலங்காரத்திற்கு
செய்முறை:-
அடியில் விதிமுலாம் பூசிய வாழ்க்கை நான்ஸ்டிக் பாத்திரத்தில் எல்லாம் போட்டு
வெறுப்பின் கொதி வரும்வரை கிளறவும். பின் அன்பின் சூட்டில் கழிவிரக்க பதம்
வரும்வரை கிளறி இறக்கி பரிமாறவும்.
இன்னும் விருப்பமான பொருட்கள் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். அசைவப் பிரியரெனில் பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சேர்த்துக்கொள்ளலாம்(இரு பாலரும்).!!”
தனிமையெனும்
பெரும் இரவை
கடக்க முயல்கின்றேன்.!!
அவள் இப்படிபட்டவளில்லை.
என் சொல்லின் சூடு தாளாமல்
மௌனப் பாலையில் 
புதைந்திருக்கிறாள்.
முடிந்து முடிந்து அவிழ்க்கும்
ஆள்காட்டிவிரலின்
சீலைமுடிச்சுகளின் தடம்
கழுத்தில் மெல்லப் பதிகிறது.
விழாமல் கனிந்து நிற்கும்
கண்ணீர்த்துளிகள்
மனதெரிக்கிறது.
வழக்கமான கால அளவைத் தாண்டி
உயிர் இறுக்குகிறாள்.
இனி நடவாதென எழும் நேரம்
தோள் பற்றித் தலை சாய்க்கிறாள்
யூகலிப்டஸ் வாசத்துடன்
கொட்டுகிறது கண்ணீர்.
முடிச்சுகளில் இப்போது
இருவிரல்கள்.!!
கொட்டைச்செடி பாலெடுத்து, வைக்கோல் குழலில் குமிழூதுகிறாள்.ஒட்டியும் ஒட்டாமலும் 
பறக்கின்றன கண்ணாடிக்குமிழ்கள்.நான் கெண்டைக்காலருகே கொலுசை நோக்கி நாக்கை விட்டுவிட்டு நீட்டும் பாம்புராணியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.முத்தம் பெற்ற கொலுசுமுத்துகள் சிவந்த குண்டுமணியாகிருந்தன.
அவள் பிடியில் சேகரண்ணன் சிகரெட் பிடிக்கும் சாயல். ஒவ்வொரு குமிழ் பிரிவதையும் ஆழ்ந்த நிதானத்துடன் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் கண்களே வெள்ளை குண்டுமணி போலிருந்தன.கண்ணிலிருந்து வழிந்த நேசம் குமிழ்களை மெல்ல மெல்ல கீழே விழாமல் ஊதிக்கொண்டே சென்றது. .அண்ணாந்த அவள் நெத்தியிலும், வலது கண்ணிலும் குமிழின் நிழல் மெதுவாக ஊர்ந்தது.
‘பாரேன் எவ்ளோ அழகா பறக்குதுன்னு’
‘யக்கோவ் பாம்புராணி கடிக்குமா?’
‘டேய் ஒருநா இது மேல ஏறி உலகத்தைச் சுத்தணும்டா.நம்ம சேகரைப் பாக்க சிங்கப்பூர் வரையாவது’
‘ஏங்கா பாம்புராணி நாக்கை உள்ள வச்சுக்காத?’
‘நாம ஏறுனா அது உடைஞ்சிரும்லடா.நீ வேற கன்னுக்குட்டியாட்டம் இருக்க’
‘நாக்கு பட்டா விஷமாக்கா?’
‘போடா எல்லாம் உடைஞ்சிருச்சு. ஒண்ணே ஒண்ணு மட்டும் போகுதுடா’
பாம்புராணி நகல, ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன்.சட்டைப்பையிலுள்ள குண்டுமணிகள் என் நெஞ்சிற்கும் அவள் தொடைக்கும் இடையே உருளத் தொடங்கின.
வா போவோமென்று இடுப்பில் தூக்கி வைத்து முத்தமிட்டாள்.அது எனக்கான முத்தமில்லையென்றாலும் அந்த எச்சில் உள்ளுக்குள் குமிழ் குமிழாய் இறங்கியது.அம்மாவின் அதே எச்சில் ஈரம்.சிவப்புத்தாவணியை என் முகத்தில் வெயில் படாமல் இறக்கிவிட்டவாறு நடக்கத்துவங்கினாள்.
குலுங்க குலுங்க குண்டுமணியெல்லாம் குதித்து விழத்தொடங்கியது வழியெங்கும்.புருவத்திற்குக் கிடையாய் கையை வைத்து பார்த்தவாறு சொன்னாள்
‘டேய் அது சிங்கப்பூர் பிளேன் போற பக்கம் போதுடா’
தாவணி வழியே பாத்தேன். அக்காவின் அன்பு ஒரு குமிழாய்ப் போய்க்கொண்டிருந்தது.
‘அது அம்மாகிட்ட கூடப் போகுமாக்கா?’
‘அதுக்கு இன்னும் ரொம்பப் பாலெடுத்து, பெரிய வைக்கோல்ல, பெரிய முட்டையா ஊதணும்டா.நாளைக்கு போவோமா...?’
நான் எவ்வி அவள் கன்னத்தை முத்தமிட்டேன்.!!
ஒருநிலையில் தனிமை
பழகிப்போகும்.
அந்த இருட்டில் கண்கள்
பார்க்கத் தொடங்கிவிடும்.
தனிமை அழகு.!!


கடக்க கடக்க தூரம்
நினைக்க நினைக்க பாரம்
வாழ்க்கை ரொம்ப மோசம்

நீயில்லாத இவ்வாழ்வை,
வாழும் இந்நகரத்தை,
கரையாத இந்நாளை,
கனவுகளில் மட்டும் 
பூக்கும் உன்னை,
சிறு தூசியென
உதற முடியவில்லை.!
சிரித்து விடவே கூடாதென
நினைத்திருந்தாள்.
இறுக்கத்தை எப்படி 
தக்கவைப்பதென்பது அவளின்
பெருங்கவலை.
எவ்வளவு இறுக்கினாலும்
இளகிவிடும் முகம்.
அவ்வளவு அழகாக
நடிக்கிறான் மறந்ததாக.
மலர்ந்த இம்முகத்தைக்
கொண்டு என்ன செய்வேனென
நொந்து கொண்டாள்.
போதாக்குறைக்குப் பரிசை
ஒளித்ததை வேறு பார்த்துவிட்டாள்.
அவன் தலை தெரிந்ததும்
ஓடிச்சென்று அணைத்தாள்.
வீடெங்கும் தெறித்த இறுக்கப் பூட்டுகள்.
முத்தங்களுக்கிடைப்பட்ட நொடியில்
பரிசை பிரித்தான்.
ஜன்னல் வெளி வந்து
விழுந்தது மலர்ந்த முகம்.
‘இதே கலர் இதே டிசைன்ல
என்கிட்டொண்ணு இருக்குன்னு
தெரியாதா?’..!!
இத்தனைக்குப் பின்பும்
நம்புகிறாளென்பது
எத்துணை ஆசுவாசம்.
என் பிழைகளை 
எவ்வளவு எளிதாக 
புறக்கணித்திருக்கிறாள்.
அழகாக வெள்ளரி அரிந்து
உப்பு மிளகாய்ப்பொடியிட
முடிகிறது அவளால்.
எவ்வளவு நேர்த்தியான துண்டுகள்
என் பிழைகளைப் போல்.
மனம் கூசி எங்கோ
வெறித்துப் பார்க்கிறேன்.
துண்டொன்றை வாயருகே
நீட்டிச் சிரிக்கிறாள்.
கண்கள் தளும்பிச் சரிகிறேன்.
தொடை நடுவில் முகமெடுத்து
புதைத்துக் கொள்கிறாள்.
இந்த இருட்டில் தொலைந்து
எவ்வளவு நாட்களாயிற்று.
முதுகில் இரண்டு சொட்டுக் கண்ணீர்
தடவலின் வெம்மையில்
கரைந்து விட்டிருந்தேன்
உப்பாக.!!