Tuesday, 29 July 2014



ஊர் என்றாலே எனக்கு கண்மாயின்
 பிம்பம் தான்.
 அதுவும் கரையோர வேப்பமரத்தின்
 தரையை விட்டு வெளிவந்த வேரில்
 சாய்ந்துகொண்டு காணும் பிம்பம்.
 எந்நேரமும் உடையப்போகும் பனிக்குடம் போல
 நிரம்பியிருக்கும் கண்மாய்
 மஞ்சள் பூசிக்குளித்த நிறைசூலி மாதிரி
 அவ்வளவு அழகு.
 அந்தப் பால்போன்ற தண்ணீரும்
 மணக்கும் சகதி வாசமும்
 துணிதுவைக்கும் செம்பரியங்கல்லும்
 குளிக்கும் துறையில் மட்டும்
 திலகமிட்ட மாதிரி வழிவிட்டு
 முழுதும் பரவியிருக்கும்
 அல்லியும்,பாசியும்,கோரையும்
 சேர்ந்தது தானே இந்தக் கண்மாய்.
 அதன் அலைகள் அழகானவை.
 அவை மையத்திலுள்ள வட்ட உறைக்கிணற்றிலிருந்து
 கிளம்பி வருகின்றன என எண்ணியதுண்டு.
 வட்டமாக ஒரு இன்ச் உயரம் எழும்பி,
 இடுப்பிலொன்னு,தலையிலொரு குடமாய்
 ஊத்திலிருந்து தண்ணி தூக்கி வரும்
 சரசக்கா நடை மாதிரி தளும்பி தளும்பி
 கரையை அடையும்.
 கண்மாயே அலை வளையல்களால்
 ஆனதாய் தோன்றும்.
 முக்கூடு வைத்துப்பிடித்த முக்குளிப்பானும்
 நீர்க்கோழியும்,
 எதேச்சையாய் கம்புவீச விழுந்த நாரையும்,
 பத்து ஊருக்கு கவுச்சி வீசும் கொக்கும்,
 ஓடுவைத்துப் பிடிக்கும் உழுவையும்,
 தூண்டிலில் மாட்டும் கெளுத்தியும்
 ஜிலேபிக் கெண்டையும்,
 மீனுக்காக வெட்டும் மண்புழுவும்,
 வலையில் அகப்படும் தண்ணிபாம்பும்,
 அந்த பச்சைத் தவளையும்
 இந்தக் கண்மாயினால் தானே
 வாழ்ந்தன.
 விடுமுறைகளனைத்தும் கண்மாயில்
 கழிப்பதற்காக விடப்பட்டவை
 எனத் தோன்றும்.
 அம்மன்துறை மடையிலிருந்து ஓடி வந்து
 கண்மாயில் குதித்ததும்,
 முங்குநீச்சல் அடித்துக்கூடக் குளிப்பவன்
 இடுப்புத்துண்டை அவிழ்த்ததும்,
 கால்கவட்டையில் தலையை விட்டு
 பின்னால் தூக்கி வீசுவதும்,
 சட்டியை கவுத்துப் போட்டு
 தமுக்கடித்து நீச்சல் பழகியதும்,
 அதிகநேரம் தண்ணியிலக் கிடந்தா
 களிம்பு மாதிரி முட்டுவாயில் படியும்
 தவளைப்பீயும்,
 கண்கள் சிவக்கச் சிவக்க குளித்ததும்,
 அப்படிக்குளித்து வீட்டுக்கு வந்தா
 அரிக்கும் சொறியும்,
 உவடேறிய வீட்டுச்சுவரில் கழுதை மாதிரி
 முதுகைத் தேய்தததும்,
 வயிறுமுட்ட நுங்கு குடித்து
 எருமை மாதிரி தண்ணியில்
 ஊறிக் கிடந்ததும்,
 இக்கண்மாயினால் தானே நடந்தன.
 உச்சிவெயிலுக்கு மேற்பரப்பு சூடாயிருக்க,
 அந்த சூட்டுக்காக விறைத்து மிதக்கும்
 தவளை மாதிரி மேலேயேக் கிடப்பதும்,
 தவறிக்கீழே போகும்  காலில் படும்
 அடிநீரின் குளிர்ச்சியும்,
 மண்வாசம் வீச,
 பெரிய குண்டுமணி மாதிரி சடைசடையாக
 மழைப்பெய்யும் போது ஓடிச்சென்று
 கண்மாயில் விழுவதும்
 சொர்க்கத்தின் இருவேறு நிலைகளின்றி
 வேறென்ன?
 என் ரத்தத்தில் ஓடுகிறது
 தேத்தாங்கொட்டை தேய்த்துக்குடித்த
 கண்மாய்த்தண்ணீர்.
 இந்தத் தோலில் படிந்திருக்கிறது
 இன்னும் அதன் சகதி.
 மூச்சில் எப்போதும் நிறைந்திருக்கிறது
 அதன் வாசம்.
 இப்போது ஒன்றுமில்லை
 விறாலும், உழுவையும்,
 கெளுத்தியும்,கெண்டையும்,
 ஒன்றுமில்லை.
 தவளையும், தண்ணிபாம்பும்
 என்னவாயிற்று தெரியவில்லை.
 கொக்கும், நாரையும்
 நீர்க்கோழியும்,
 ஏழுகடல் தாண்டிப் பறந்திருக்கலாம்.
 மண்புழுவெல்லாம் மண்ணோடு
 மக்கியிருக்கலாம்.
 நானும் பரதேசம் போக,
 நான் நீச்சலடித்த அம்மன் துறையில்,
 பழுப்பேறிய சிவப்புப் பெட்டிகோட் போட்ட
 சிறுமியும்,அவன் தம்பியும்
 சைக்கிள் பழகுகிறார்கள்.
 எல்லாவற்றையும்  பார்த்துக்கொண்டிருக்கிறது
 கண்மாய் நடுவில் உள்ள
 உறைக்கிணறு.!!”


    -அன்றில்

Sunday, 27 July 2014

இட்டு நிரப்பும் மௌனங்கள்




சில வேதனைகள்
சில வலிகள்
சில உணர்வுகளை
வார்த்தைகளாய் மாற்ற முயன்று
தோற்றுப்போகிறோம் நாம்.
நினைவில் ஊருகின்றன வார்த்தைகள்
ஒரு மண்புழுப் போல.
வார்த்தைகளின் எச்சங்களை
மௌனங்கள் கொண்டு நிரப்புகிறோம்
வேறுவழியின்றி.
வார்த்தைகள் தராத அர்த்தத்தை
மௌனங்கள் தருகின்றன.
வார்த்தைகளின் நீட்சியாய்
மௌனங்கள் நிற்கின்றன.
புரிந்து கொள்ளலில் இருக்கின்றன
மௌனத்தின் கனங்கள்.
அவை மனதை அழுத்துகின்றன
ஒருபெரும் பாறையைப் போல
புரியாத மௌனங்கள்
அர்த்தம் தேடி அலைகின்றன
ஒரு அகதியைப் போல.

-அன்றில்