“பரபரப்பற்ற ரயில் நிலையத்தின் நடைமேடை முடிவில் அப்படியேதானிருக்கிறது அந்த அமர்விடம். தூசியும் காய்ந்த புங்கைப்பூவுமாய்.இங்கு தான் அவள் வந்து நின்றாள் நனைந்த ஒரு மழைப்பறவை போல. இரத்தசோகை தேகத்தில், ஜ்வாலை பொழிந்த கண்கள். கற்பலகை மீது கூந்தல் சொட்டிய குளத்தில் விழுந்த நான், அவள் கண்களின் மின்னல் பிடித்து மேலேறினேன். நெடுநாள் கூடிப்பறந்த பறவையைப் போல்பார்த்தாள். சிலரால் சிலரை நெடுநாள் பழகியது போல் அணுக முடிகிறது. கண்களால் ஏதேதோ பேசினாள். அது பேரன்பின் மொழி.கனிந்து கண்ணாடியாய்ப் பிரதிபலித்தேன் அன்பின் சூட்டை. அவளுக்கான வாழ்வின் ஜன்னலில் கம்பிகள் இல்லாதது குறித்தும், நினைத்த நேரம் விர்ரென வானம் ஏகுவதையும், வானிலிருந்து பார்த்தால் எல்லாமே அழகென்றும் சொன்னாள். கம்பிகள் இல்லாத ஜன்னல் பாதுகாப்பற்றதில்லையாவென எனக்கேட்டேன் . நான் அனுபவிக்காத சுதந்திரமல்லவா அது? பொறாமையின் நிழல் என் கண்களில்.ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி தலையின் விழுந்த புங்கைப்பூக்களைத் தட்டி விட்டாள். பின் விழும் மழையை ஏந்திக்கொள்வது போல் பார்த்தாள்.அவளே ஒரு நிரம்பித் தளும்பும் கோப்பை போலிருந்தாள்..ஒவ்வொரு மழை நாளிலும் இங்கு வருவதாகவும், அவள் வர நினைக்கும் போதெல்லாம் மழை பொழிவதாகவும் சொன்னாள்.கடந்து சென்ற ரயிலின் பேரிரைச்சலுக்குக் காது பொத்திய என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் நீ பயப்பட வேண்டியது இடிக்கல்ல, மின்னலுக்கு.தூறல் முடிந்த பொழுதில் அவளின் சிறகுகள் காய்ந்து விட்டிருந்தன. பறக்கத் தயாரானவள் அருகில் வந்து கையைப் பிடித்துக் கல்லில் வைத்தாள். முதன்முதலாய் ஒர் ஆணின் கையைப்பற்றுவதாகவும்,உன் ஜன்னல் கம்பிகள் இற்று உதிரும் வரை, இனி வரும் மழை நாட்களில் இதில் படிந்த உன் ரேகைகளை என் இறகுகளால் தடவிப்பார்த்துக்கொள்வேனெனச் சொல்லிப் பறந்தாள். என் கைளில் ஒரு வெம்மையான இறகு.மனதில் மெல்லிய வெயிலடித்தது.கம்பிகள் எளிதாய் உதிர்வதில்லை.இதோ இன்று ரேகை படிந்த இடத்தில் அந்த இறகை வைத்தேன். நினைவுகளில் அவளின் சிறகசைவு.பின்னாள் இரைச்சலுடன் ரயில் கடந்துக்கொண்டிருந்தது.சலனமற்று வானைப் பார்த்தேன். கருத்து நகர்ந்த மேகத்தின் முதல் துளி இறகின் மேல் விழுந்தது. அவள் ஜன்னலுக்குக் கம்பிகள் முளைத்திருக்கலாம்.!!"