“மாரியம்மன் கோவில் கரகமெடுப்புக்கு
எப்போதும் கடை போடும் கனகு அக்கா.
ரெண்டாள் உயர வேப்பங்கன்னுக்குக் கீழே
ராசுவின் பலூன்கடைக்கு பக்கத்தில்.
கடையென்றால்
பார் வைக்காத பெரிய சைக்கிள்,
ரெண்டு பாய், ஒரு நார்ப்பெட்டி,
சாராய போத்தலில் சீலைத்திரியிட்ட விளக்கு.
அக்காவுக்கு நாடகம் என்றால் பித்து.
திருவிழாவுக்கு எப்பவும் அரிச்சந்திர மயான காண்டம்.
ஞானகுருசாமி சந்திரன்,
பொன்னமராவதி ஆறுமுகம் பபூன் என்றால்
சோறு தண்ணி வேணாம் அதுக்கு.
‘இதுதான்டா ஒரிஜினல் நடிப்பு
ஜவ்வுமிட்டாய் மெல்லுற மாதிரி வாயசைக்க ஒருத்தன்
சாகமாட்டாம அவனுக்கு பேச இன்னொருத்தன்
சினிமால இதுக்குமுன்னே ஒண்ணுமில்லேடா’
எனச்சொல்லும் கனகு அக்காவுக்கு
முப்பத்தைந்து வயதிருக்கலாம்.
கல்யாணம் ஆகாட்டியும்
நூல்சீலை தான் கட்டும்.
கோகுல்சாண்டல் பவுடர்
நாலணா சைசுல சாந்துப்பொட்டு
ஒரு குட்டி தேங்காப்பூத்துண்டு சகிதம் வரும்
அக்கா சொல்லும்
‘எனக்கு மாப்ள அந்த அம்பிலில தான்
கிடைப்பானாக்கும்.’
வீட்டில் முதல்ஆளாய் கறிசோறு சாப்பிட்டுக் கிளம்பி
ஒரு பாயில் சாமான்களைப் பரப்பி,
ஒரு பாய் விரித்து உட்காரும் மடியில்
ராசண்ணன் குழந்தையோடு.
காற்றில் அசைந்து அசைந்து
அணைந்து போவதாய் பாவ்லா காட்டும்
விளக்கொளியில் தெரியும்
பொட்டு வைத்த அக்கா முகத்திற்கும்
உள்ளே அலங்கரிக்கப்பட்ட
அம்மன் முகத்திற்கும்
அதிக வித்தியாசமில்லை.
திருவிழாவில் வாங்கும்
கல்கோனாவும், ஜவ்வுமிட்டாயும்
தனிச்சுவை.
ரெண்டு ரூபாய்க்கு நாலு கல்கோனா போக
ஒரு பெரிய சூட மிட்டாயும்,
கன்னத்தில் கிள்ளிக்கொடுக்கும் முத்தமும்
இனாம்.
ராசண்ணன் பவர் போடப் போக,
அழும்குழந்தையைப் பாலூட்டக் கொடுத்துவிட்டு
பலூன்கடையைச் சேர்த்துப் பார்த்துக் கொள்ளும்
கனகக்கா கண்களில் பொங்கி வழிவது
தாய்மை.
சைக்கிளில் சுக்குக்காபி விற்கும் ஐயாவிடம்
பண்டமாற்றில் ஒருகட்டு செய்யது பீடிக்கு
எனக்கும் சேர்த்து இரவெல்லாம்
காபி வாங்கித்தரும்.
நேரம் செல்லச்செல்ல
தூக்கத்தில் கண்கள் கிறங்க
கையை மடக்கி முட்டுக்கொடுத்து
ஒருக்களித்துப் படுத்து நாடகம் பார்க்கும்.
நாடகம் பார்த்தப்படி தூங்கிப்போகும் என்னை
அலேக்காக தூக்கிப் போய் தன் பாயில் போட்டு
மடியில் தலை கிடத்தி கோதியபடி
‘புத்தம் புது காலை’ எனப் பாடத்தொடங்கும்போது
அந்த மடியில் குழந்தையாகவே
இருந்துவிடத் தோன்றும் வாழ்வு முழுதும்.
வருடங்கள் உருண்டோடியதில்
வாழ்வின் அச்சிலிருந்து விலகிவிட்டோம்
வெகு தொலைவு.
இப்போதெல்லாம் திருவிழாக்கு கடை போடுவதில்லை
கனகு அக்கா.
ராசண்ணன் சொன்னார்
ஏழெட்டு வருடம் முன்பு ஆத்துப்பாலத்தில்
நாடகக்கார வேன் மோதி அக்கா....
இருந்தாலும் திரைகட்டி ஓட்டும் சினிமா
அக்காவுக்கு பிடிப்பதில்லை.
மரமாகிவிட்ட வேப்பங்கன்னுக்குக் கீழே
பாயை விரித்து படம் பார்க்கையில்
அருகில் கிடக்கும் கூழாங்கல்லை கல்கோனாவாய்
வாயில் போட்டுக்கொள்ள.
தலையைக் கோதும் காற்றுவிரல்களுடன்,
திரையில் ஓடுகிறது அரிச்சந்திர மயான காண்டம்.
தூரத்தே அம்பிலியில் கேட்கிறது
‘புத்தம் புது காலை, பொன்னிற வேளை’.!!”
-அன்றில்